பிறந்திருக்கும் 2018 ஆம் வருடம் நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான , மகிழ்ச்சியான , ஆரோக்கியமான, பிரகாசமான, வெற்றிகரமான , செழுமையும் முழுமையும் நிறைந்த ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக் கொண்டு உங்கள் அனைவருக்கும் புத்தாண்டின் வாழ்த்துக்களை கூறி , அதோடு இவ்வருடம் முழுவதும் எப்பொழுதும் நம்மை வழி நடத்த நமக்கு ஆற்றலை தர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

ஒருமுறை அடுத்த நாள் பிறக்க இருக்கும் குழந்தை இறைவனிடம் பேசியது. “கடவுளே நாளை நான் உலகிற்கு செல்லப்போகிறேன். ஆனால் நான் மிகவும் சிறியவன். என்னிடம் வலிமை என்பது இல்லை. எப்படி இந்த உலகை சமாளிக்கப்போகிறேன் ? என்று கேட்டது. அப்போது கடவுள், “கவலைப்படாதே! என்னிடம் உள்ள ஆயிரக்கனக்கான வானதூதர்களுள் ஒருவரை உனக்குத் துனையாக அனுப்புகிறேன். அவர் உன்னை பார்த்துக் கொள்வார்” என்றார். குழந்தை மீண்டும் “எனக்குப் பாடத் தெரியாது! பழகத் தெரியாது “ என்றது. அதற்கு கடவுள் சொன்னார் “அதை வானதூதர் பார்த்துக் கொள்வார். உனக்காகப் பாடுவார். உனக்காகப் பழகுவார். “. திரும்பவும் குழந்தை “மக்களின் பேச்சை நான் எப்படி புரிந்து கொள்வேன் ? எனக்கு தான் மொழியே தெரியாது” என்றது. கடவுள் ,” வானதூதர் உனக்குப் பிற்ரின் உரையாடலைக் கேட்டு பதில் சொல்வார்” என்றார். குழந்தை “கட்வுளே என்னை உருவாக்கிய உங்களிடம் பேச வேண்டும். நான் உலகிற்கு சென்றால் உங்களோடு எப்படி பேசுவேன் ? “ என்று கேட்டது. அப்பொழுது கடவுள் சொன்னார் “ அந்த வானதூதர் உனக்கு செபிக்க கற்றுக் கொடுப்பார்”. குழந்தை ,”கடவுளே, நான் நாளை உலகிற்கு செல்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” நீங்கள் அனுப்பும் வானதூதரின் பெயர் என்னவென்று இப்பொழுதாவது சொல்லுங்களேன் என்று கேட்டது. கடவுள் அதற்கு வானதூதர் குறிப்பிட்டு பெயர் சொல்லும்படி இல்லை. ஆனால் அவரை நீ அம்மா என்று அழைப்பாய் என்றார்.

கடவுள் உலகத்தை படைத்தவுடன், ஏழு படைகளாக வானதூதரை படைத்தார். மிக்கேல் அதிதூதர், கபிரியேல், ரபேல் இந்த மூவரையும் விவிலியத்தில் பார்த்திருக்கின்றோம். மற்ற நான்கு பேர் 1. உரியல் 2. இரகுவேல் 3. சாரியல் 4. ஜெராமில் - இவர்களை “ஏனோக்கு” என்ற நூலில் பார்க்கின்றோம்.

மிக்கேல் அதிதூதர் என்றால் நீதியின் வானதூதர் என்று அர்த்தம். புனித மிக்கேலின் நான்கு பணியை கிறிஸ்தவ பாரம்பரியம் குறிப்பிடுகிறது.

1. சாத்தானுக்கு எதிராகப் போராடுகிறார்
2. விசுவாசிகளின் ஆன்மாவை தீய சக்திகளிடமிருந்து , குறிப்பாக இறக்கும் நேரத்தில் பாதுகாக்கிறார்.
3. பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கும் , புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கும் , இன்னும் நம் திருச்சபைக்கும் பாதுகாவலராக் இருக்கின்றார்.
4. இறந்த மனிதர்களின் ஆன்மாவை இறுதித் தீர்வைக்கு உட்படுத்துகிறார். புனித மிக்கேல் மணப் பகுதிகளுக்கும், திருத்தந்தையர்களுக்கும் காவல் தூதராக இருக்கிறார். மேலும் நற்கருணையின் காவலராகவும் இருக்கின்றார்.

புனித கபிரியேல் என்றால் கடவுளின் ஆற்றல் என்று அர்த்தம். இவரைப் பற்றி விவிலியத்தில் பல இடங்களின் தோன்றி இவரின் ஆற்றலைக் காண்கிறோம். உதாரணம்.
1. திருமுழுக்கு யோவானின் பிறப்பை பற்றி அறிவித்தவர்
2. தூய ஆவியின் வல்லமையால் கருவுற்றிருந்த அன்னை மரியாவை ஏற்றுக் கொள்வதா, விலக்கி விடுவதா என்று குழம்பிக் கொண்டிருந்த போது , அவருக்குத் தோன்றி தெளிவும் மனத்துணிவும் கொடுத்தார்.
3. நம் ஏசு பாடுபடும் முன்பு ஒலிவமலைக்கு சென்று ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்துகின்றார்
4. ஆண்டவர் ஏசுவை கருவில் சுமக்க ஆண்டவர் அன்னை மரியாவை தேர்ந்தெடுத்த செய்தியை கூறியவரும் கபிரியலே.
5. நாம் காணும் தொலைக்காட்சியின் ஊடகத்திற்குப் பாதுகாவலர். தேவதூதர்களுக்கெல்லாம் தலைவர் கபிரியேல் என்றும் , இவரே முகமது நபிக்கு காட்சி கொடுத்தார் என்றும் குரானில் கூறப்பட்டுள்ளது

புனித இரபேல் என்றால் கடவுள் குணமாக்குகிறார் என்று அர்த்தம்.

1. விவிலியத்தில் தோபித் ஆகமத்தில் இவர் செய்த அரும்பணிகளை வாசித்துள்ளோம். அதில் குணமளிப்பவராகவும், நீண்ட தூரப் பயணத்திற்கு பாதுகாவலாராகவும் பணியாற்றியுள்ளார்.
2. யோவான் 5 :1-9 நீர் கலங்குவதற்காக எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் உள்ள ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் இருந்தது. இதன் அருகில் உடல் நலமுற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாகப் படுத்திருந்தனர். ஆண்டவரின் தூதர் குளத்து நீரை கலக்குவார். அப்போது இறங்கினால் சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. குளத்தை கலக்கி பலருக்கும் சுகம் அளித்தவர் இவரே.

இப்படியாக வானதூதர்கள் மறைமுகமாக இருந்து நண்பனாக, கனவன், மனைவி, பிள்ளைகளாக பல உருவங்களில் தோன்றி நம்மை பாதுகாக்கின்றனர். ஆகவே நாமும் ஒருவருக்கொருவர் Gaurdian Angel ஆக இருந்து நல்ல நல்ல காரியங்களை செய்ய முற்படுவோம்.