ஆண்டவர் முன் அமர்வதை; நற்கருணை நாதர் முன் அமர்ந்து கொடியோடு இணைந்த கிளைகளை போல் ஆண்டவரிடம் நம்மை இணைப்பது தான் ஆண்டவரோடு இணைதல்.

இயேசுவோடு இணைந்துகொள்ளும்போது நாம் காணும் உலகில் எதுவும் தனிமை இல்லை. தனிமை களையப்படுகிறது. உலகின் இயக்கத்திற்கு அடிப்படையானது இணைப்பு. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது இயேசுவோடு நம்மை இணைப்பது.

இன்றைய சூழ்நிலையில் நாம் எப்படி இயேசுவோடு இணைத்துக்கொண்டு கனிதரும் மரங்களாக இருக்கிறோம்; அவ்வாறு இணைய தடுப்பது எது? தடை கற்களாக இருபவை எவை என்று உணர்வோம். பெலன் இல்லாதவர்களாகிய நாம் ஏசுவின் வல்லமையால் பெலன் பெறுவோம்! சிந்திப்போம்! செயல்படுவோம்!

திராட்சை கொடியானது செடியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை தான் அதற்கு ஜீவன். கனிகொடுக்க முடியும், வெட்டி எறியப்பட்டால் அது வாடி குப்பையில் சென்று எரிக்கப்பட்டுவிடும்.

நாமும் கிறிஸ்துவோடு நம்மை இணைத்து வாழும்வரை பெலன் அடைந்து நல்ல பிரியோஜனமுள்ள முழு மனிதனாக வாழ இயலும். அவரை விட்டு அகன்று செல்லும்போது சில பல சிற்றின்பங்களை அடைந்தாலும் அது நிலைத்திராது; நிலையான, நிறைவான மகிழ்ச்சையை கொடாது. அந்த சிறிது நேர மகிழிச்சிக்காக நாம் நமது நிம்மதியை இழக்கிறோம். ஒன்றின் பின் ஒன்றாக பல பாவ செயல்களை செய்ய தூண்டும்.

சில சமயங்களில் நாம் தனிமையாக விடப்பட்டதாக நினைக்கிறோம். அது பெரிய தவறு. என்றுமே நாம் தனிமையாக விடப்படுவது இல்லை. நம் அருள்நாதர் ஏசு என்றும் நம்மோடு இருக்கிறார். யார் நம்மை கைவிட்டாலும் அவர் நம்மை கைவிட மாட்டார்.

" நான் உங்களை திக்கற்றவர்களாய் விட்டேன்" என்று அன்பு கூர்ந்து நம்மை பார்த்து கூறுகின்றார். எவ்வாரு ஊதாரி பிள்ளை தன் தவறுகளையெல்லாம் உணர்ந்து தன் தகப்பன் வீட்டிற்கு திரும்புகையில் தந்தை ஓடி வந்து அவனை தன் மார்போடு அணைத்து முத்தமிட்டு வரவேற்றாரோ அதேபோல் நம் அன்புள்ளம் கொண்ட தேவன் நாம் எந்த நிலையில் அவரண்டை சென்றாலும் நம்மை தூய்மை படுத்தி தம் நெஞ்சோடு தழுவி ஆறுதல் கூறி அரவணனைக்க தயாராக தம் இரு கரங்களையும் நீட்டி காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆண்டவரோடு இணைந்த வாழ்விற்கு மாபெரும் உதாரணமாக திகழ்பவர் நம் புனித அன்னை தெரசா அவர்கள். அயல் நாட்டில் பிறந்திருந்தாலும் நம் நாட்டில் குடியேறி சாலையோரம் வாழும், எல்லோராலும் கைவிடப்பட்டு உணவின்றி, உடையின்றி, படுக்க இடமின்றி பரிதவிக்கும் மக்களை கண்டு மனதுருக்கினார். கிறிஸ்துவின் அன்பால் நெருக்கப்பட்டு அவர்களுக்குள் கிறிஸ்துவை கண்டு அடைக்கலம் கொடுத்து மறுவாழ்வு ஈந்தார். அதற்கென ஒரு சபையையே ஸ்தாபிதம் செய்தார். நோயாளிகளை அன்போடு நேசித்து தேற்றினார். எவ்வித சோதனை, துன்பம் நேரிடினும் இன்முகத்துடன் இறைபணி செய்தார். ஒரு அன்பார் அவரிடம் வந்து இவ்வளவு இடறலுக்குள்ளும் இரவும் பகலும் சிரித்தபடி உம்மால் எப்படி பணிவிடை செய்யமுடிகிறது என்று கேட்கையில்; அவர் கூறியது " எவ்வளவு இன்னல்கள் வரினும் இறைவனோடு ஒருமணிநேரம் நாங்கள் அமர்ந்து அவருடன் உரையாடி அவர் அன்பில் இணையும் போது எங்கள் சோர்வுகள் அகன்று நாங்கள் புது பெலன் அடைகிறோம்" என்றார். இது தான் ஆண்டவரோடு இணைதல்.

மகனே! மகளே! நீ என்ன பாவம் செய்திருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அன்பு ஏசுவை நாடி ஓடு. அவர் உன்னை அரவணைப்பர், அன்பு செய்வார். உன் வாழ்வை நிறைவாழ்வாக்குவார். இயேசுவை நேசிப்பாயா? கல்வாரி சிலுவையை கண்டபின்னும் நேசியாமல் இருப்பாயோ? இயேசுவையே நேசிப்போம்! அவரையே சுவாசிப்போம்!

இறைவாழ்வு வாழ அவரோடு என்றும் இணைதிருப்போம்! ஆமென்!

-புஷ்பாவதி வின்சென்ட்