நான் இதுவரை ஒரு புத்தாண்டு தீர்மானம் எடுத்ததோ, திட்டமிட்டதோ இல்லை. இதைப்பற்றி பல முறை யோசித்திருக்கிறேன் ஆனால் இது என்னால் இயலாதது என்றே ஒதுக்கி தள்ளி இருக்கிறேன்.

இம்முறையாவது ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்திக்கொண்டிருந்த பொழுது, என் மனைவி அடிக்கடி 'நாம் செய்வது நம் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்' என்று சொல்வது நினைவில் வந்தது.

நான் கடைபிடிக்க வேண்டும், என் மகனுக்கும் கற்பிக்க வேண்டும் என நினைத்த பொழுது, உடனே என் நினைவுக்கு வந்தது 'கீழ்படிதல்'. பெரும்பாலும் நான் என் பெற்றோருக்கு கீழ்ப்படிந்தே நடந்திருக்கிறேன். இதை சற்று சீர் தூக்கி பார்க்கும் பொழுது, 'கீழ்ப்படிதல்' என்பது நம் பெற்றோர்கள் விருப்பத்திற்கும், பத்து கற்பனைகளுக்கும் ஏற்ப நடப்பது மட்டும் அல்ல என உணர முடிந்தது. வெகு கடினமானதொரு விடயமாகவே தோன்றியது.

கடவுள் கேட்டதால் ஒரு தந்தை தன் ஒரே மகனை எப்படி பலியாக கொடுக்க முடியும்? இன்றைய சமுதாயத்தில் இது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. நிபந்தனையற்ற, கேள்விகளற்ற விசுவாசம்! இதுதான் கீழ்ப்படிதலா ?

அந்நாட்களிள் கடவுள் தாமே மக்களுக்கு நேரடியாக தோன்றியதால் இவ்வகையான விசுவாசத்தை காண முடிந்தது என வாதிடலாம். நிச்சயமாக! ஆனால் இன்று மனித அறிவு ஆபிரகாமின் காலத்தை விட அளவிட முடியாத வளர்ச்சி கண்டுள்ளது. ஆதியிலே தேவன் மனிதர்களுக்கு தோன்றினார், பின் விசுவாசிகளுக்கும் புனிதர்களுக்கும் மட்டுமே தோன்றினார். அதன் பின் புனிதர்கள் மக்களுக்கு தோன்றினர். இன்றைய நிலை என்ன ? இது நம் பாவங்களினால் என்று நான் கருதவில்லை. பாவம் அன்றும் இருந்தது. இன்று கடவுள் நமக்கு போதிய ஞானத்தை கொடுத்துள்ளார். கடந்த காலத்தை கண்டு, கற்று உணரும் ஞானம் இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இயேசு லாசருடைய நீதிக்கதை வழியாக இவ்வாறு கூறினார் என்று நான் நினைக்கிறேன். "அவர்கள் மோயிசனுக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள்". பல முறை வழிபாட்டில் கேட்ட வார்த்தைகளின் மெய்ப்பொருள் இப்போது எனக்கு உரைக்க ஆரம்பித்தது.

நம்மில் பலர் சகோதரி கரோலின் அவர்களின் அனுபவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். நான் முதலில் கேட்ட போது என்னால் இதை நம்ப முடியவில்லை. நம்ப வேண்டும் என என்னை நானே வலியுறுத்திக்கொண்டேன். ஆழ்மன சந்தேகங்கள் கிளர்ச்சி செய்தன. எத்தனை பேருக்கு இது ஏற்பட்டிருக்கும் என தெரியவில்லை. எனக்கு வெகு காலமாக உண்டு. நான் நம்ப வேண்டும் என நினைப்பவற்றை என் ஆழ்மனம் எள்ளி நகையாடும். என் நம்பிக்கை ஆழமானதாய் இருந்திருந்தால், "எல்லாவற்றையும் விட்டு விட்டு என் பின் செல்!" என்ற வார்த்தைகளுக்குத்தான் நான் செவி சாய்த்திருப்பேனே!

கடவுள் நமக்கு பல உதாரணங்கள் அளித்தும் நான் இன்னும் கடலில் இறங்கி தவித்த ராயப்பராகவும், தேவரீரது காயங்களை ஆழம் பார்த்த தோமையாராகவும் இருக்கின்றேன். பயமே இதற்கு மூல காரணமாயிற்று. உலக வாழ்வை இழந்து விடுவோம் என்ற பயமே மறுவாழ்வை இழக்கச்செயகின்றது. நமது பயம் சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் அவன் நம்மை அண்டுவதில்லை. விசுவாசிகளையே சோதிக்கின்றான்.

இத்தனை எண்ணங்களுக்குப் பின் எனது தீர்மானக் காகிதம் என்னைப் பார்த்து நகைத்தது.

பல நேரங்களில் நாம் நமது முயற்சிகளில் தளர்வடைந்து விடுகிறோம். கண் துஞ்சும், கால் இடரும். எனக்கு நீதிமொழிகள் நினைவுக்கு வந்தன. "ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன். நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது". நாம் தளர்வாய் இருப்பதை இறைவன் அறிவார். நான் அடுத்த அடி எடுத்து வைப்பது மட்டுமே இப்போதைய தேவையாய் உள்ளது. இந்த படிகள் பல தலைமுறைகளாக வளர்ந்து வந்துள்ளது. எமது தலைமுறைகளை திரும்பி பார்க்கிறேன். நற்செய்தி அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளில் எனது மரபணு விசுவாசத்தில் சீரியதொரு முன்னேற்றம் கண்டுள்ளது எமக்கு உவகை அளித்தது.

எம்மால் கீழ்படிந்து நடக்க முடியும் என்றொறு நம்பிக்கையும் பிறந்தது. இனி நான் முன்செல்ல வேண்டும், என்ன நேர்ந்தாலும் சரி. கிறிஸ்துவில் அன்பு மிக்க சகோதர சகோதரியரே உங்களையும் கர்த்தரிடம் எமக்காகவும் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். புதிய வருடத்தில் கிறிஸ்துவின் அன்பில் நீங்கள் மேன்மேலும் வளரவும் வாழ்த்துகிறேன். ஆமென்.

நன்றி
ஹென்றி ஜோன்ஸ்