இயேசுவுக்கு மிகவும் பிரியமானவர்களே, உயிர்த்த இயேசுவின் சமாதானமும், அன்பும் நம் அனைவரோடும் இருப்பதாக - அல்லேலூயா!

உயிர்த்த இயேசு நமக்கு காட்டிய அன்பை விட மேலான அன்பு உலகில் வேறு இல்லை என்பதை உணர்ந்து எல்லோரும் ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் உள்ளவர்களாய் திகழ்ந்து ஒரே மனத்தவராய் இருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள் என்கிறார் ஆண்டவர் இதுவே உயிர்ப்பின் மகிழ்ச்சி, உயிர்ப்பின் பாஸ்கா.

உயிர்த்த இயேசு நமக்கு கொடுத்த அன்பு கட்டளை என்னவெனில் “என்னைப் போலவே நீங்களும் ஒருவர் ஒருவர் மீது அன்பு காட்டுங்கள்”

ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்று புதிய கட்டளைக்கு கீழ்படிவது எளிதல்ல. இயேசு நமக்காக மரித்திருப்பதால் நாமும் அவருக்காக வாழ வேண்டும் என்ற உந்துதல் நமக்கு இருக்க வேண்டும். நாமும் அவரைப் போலவே சுயநலமற்ற தியாக அன்பை காட்டுவதன் மூலம் நாம் அவருக்காக வாழ முடியும்.

உன்னில் நீ அன்பு கூறுவது போல் மட்டுமல்ல, உன்னை விட அதிகமாகவே பிறர் மீது அன்பு கூறுவாயாக என்று கூறும் இயேசு தம் வாழ்விலும் சாவிலும் இத்தகைய அன்பை காட்டினார்.

சிலுவையில் தொங்கி, உயிர் ஊசலாட, இரத்தம் இல்லை, ஆக்சிஜன் இல்லை இதயம் சுருங்க நாடி துடிப்பு குறைய மூன்று ஆணிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு “தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்” என்றார். இதைவிட பிறரன்பு வேறென்ன இருக்க முடியும்?

இத்தகைய சுயநலமற்ற அன்பை நாமும் பிறர்மீது காட்டினால் நாமம் உண்மை கிறிஸ்தவர்கள் என அடையாளம் காட்டப்படுவோம். இத்தகைய அன்பை ஓர் “அடையாள அட்டைக்கு” ஒப்பிடலாம். ஒருவரை அடையாளம் காண அதாவது அவரோடு பெயரையும், சபையின் பெயரையும் தெரிந்து கொள்ள அந்த அட்டை உதவுகிறது. அதுபோலவே ஒருவர் மீது ஒருவர் காட்டும் “சுயநலமற்ற அன்பு” உண்மைக் கிறிஸ்துவர்களை கண்டுகொள்ள உதவும் “அடையாள அட்டையாக” இருக்கிறது.

இலாசர் இழந்ததை மரியா அழுதுகொண்டு சொன்னபோது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். எத்தனை அன்பு பாருங்கள். பெத்தானியாவில் வாழ்ந்த ஒரு ஏழைக் குடும்பம் தான்.

இறைவன் எந்த அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்றால் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவுக்கு கையளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16). இதைவிட பிறரன்பு வேறு என்ன இருக்க முடியும்.

ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள் என்றார் இயேசு. ஏனெனில், அன்பு திரளான பாவங்களை போக்கும். ஆகவே கடவுளுடைய வல்லமை கரத்தின் கீழ் நம்மை தாழ்த்துவோம். அப்பொழுது ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார். அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருப்போமாக. எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள நம்மை அழைத்திருக்கிறார். சிறிது காலத்துக்கு பின் நம்மை சீர்படுத்தி உறுதிப்படுத்தி வழிப்படுத்தி நிலை நிறுத்துவார் (1பேதுரு 5: 6,8,10)

சிந்தனைக்கு: உயிர்த்த இயேசு கொடுத்த சமாதானம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பது போல நாமும் அந்த சமாதானத்தை பிறரோடு பகிர்ந்து அன்பு கொண்டு வாழ்வோமாக. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அழியாத அன்பு கொண்டிருக்கும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக.

ஆமென்! அல்லேலூயா!

-Beena